தவறான அக்குபஞ்சர் சிகிச்சையால் யாழில் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ் நகர் பகுதியை அண்மித்த பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிகிச்சை நிலையத்திற்கு சமூக ஊடகங்களில் வந்த விளம்பரங்களை நம்பி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு முழங்கால் வலிகளை போக்குவதாக முழங்கால்களில் ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையின் பின்னர் கடுமையான வலிகள் ஏற்பட்டமையால் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் போது , அக்குபஞ்சர் சிகிச்சை என தவறான முறைகளில் செலுத்தப்பட்ட ஊசிகள் மூலம் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டு, அவை உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி தவறான சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்வோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையிலும் , அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் போதாமையாக உள்ளதாகவும் , இவ்வாறான போலி மருத்துவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே போலி மருத்துவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.