மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐஐடி பட்டதாரி பவன் டவுலூரி!

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐஐடி பட்டதாரி பவன் டவுலூரி!

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபோஸின் புதிய தலைவராக சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் மைக்ரோசாப்ட் விண்டோஸை வழிநடத்தி வந்த பனோஸ் பனாய், அமேசான் நிறுவனத்தில் இணைவதாக கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். பனோஸ் ராஜினாமாவுக்கு பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்கள் தனித்தனி தலைமையின் கீழ் பிரிக்கப்பட்டன. இதில் சர்ஃபேஸ் குழுவை வழிநடத்தியது ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான பவன் டவுலூரியே. மைக்கேல் பரக்கின் என்பவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் குழுவை வழிநடத்தினார்.

தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்களை மீண்டும் ஒன்றிணைத்து அதற்கு புதிய தலைவராக பவன் டவுலூரி நியமிக்கப்பட்டுள்ளார். AI தயாரிப்புகளை உருவாக்க மைக்ரோசாஃப்ட் புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் நிலையில் பவன் டவுலூரியின் நியமனம் கவனம் ஈர்த்துள்ளது.

உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் பலவற்றில் இந்தியர்கள் பலர் கோடிகளில் சம்பளம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில், சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெல்லா வரிசையில் பவன் டவுலூரி இணைந்துள்ளார்.

சென்னை ஐஐடியில் இளங்கலை பட்டம் முடித்தபின் பவன் டவுலூரி 1999ல் அமெரிக்காவில் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலைப்பட்டம் பெற்றார். இதன்பின் அவர் இணைந்தது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்தான். சுமார் 23 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திலேயே பணியாற்றி வருகிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டிவைசஸ் பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் ஜா என்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விண்டோஸ் குழுவிடம் பேசும்போது, “பவன் டவுலூரி தலைமையில் AI சகாப்தத்திற்கான சிஸ்டம், எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டிவைஸ் பிரிவை முழுமையாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே, விண்டோஸ் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டிவைஸ் குழு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.