Breaking news - நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர்!

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியுள்ளது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியுள்ளது.

விக்ரம் என்ற வாகனம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதன்படி, இந்தியா நிலவின் மீது மேற்கொண்ட மூன்றாவது முயற்சி வெற்றியளித்துள்ளது. 

முன்னதாக, இலங்கை - இந்திய நேரப்படி இன்று (23) மாலை 6:04 மணிக்கு தரையிறக்கம் நடைபெறவுள்ளதாகவும், எந்த பிரச்சினையும் இல்லாமல் நிலவில் தரையிறங்க விண்கலம் தயாராக உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்திருந்தது.

இதன்படி, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடாக வரலாற்றில் இந்தியா பதிவாகியுள்ளது.

முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினால் அனுப்பப்பட்ட, சந்திரயான் 02 விண்கலத்தின் வாகன பகுதி நிலவில் தரையிறங்கும் போது, அந்த திட்டம் தோல்வியடைந்திருந்தது.

எனினும், அதன் தவறுகளை சீர்செய்து சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி  ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெங்களுரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தொடர்ந்தும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புவியின் சுற்றுவட்டப்பாதையை சுற்றி முடித்த பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான் 03 விண்கலம் நுழைந்துள்ளது.

சந்திரயான்  -03 நிலவின் போகுஸ்வாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் அருகே தரையிறங்கியுள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

தரையிறங்குவதற்கு முன்னதாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதற்கான தகுந்த இடத்தை விக்ரம் லேண்டர் படம் எடுத்தது.

அதன் பின்னர் பாதுகாப்பாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் இருந்து இணையவழியில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வரலாறு படைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த தருணம் இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தருணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த வெற்றியின் மூலம் புதிய இந்தியா மலர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த வெற்றியில் அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா அண்மையில் அனுப்பிய லூனா -25 திட்டம் தோல்வியடைந்திருந்தது.

இந்தநிலையில், குறித்த திட்டத்தில் வெற்றியடைந்த நிலவின் தென் துருவத்திற்கான ஆய்வில் வெற்றிகாணும் முதல் நாடாக இந்தியா வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.