காட்டுவழி பாதயாத்திரையில் கந்தனை உணர்ந்த யாத்திரிகர்கள் - ஆடிவேல் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவம் கடந்த (19) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையை ஆரம்பித்த பக்தர்கள் திருத்தலத்தை சென்றடைந்துள்ளனர்.

காட்டுவழி பாதயாத்திரையில் கந்தனை உணர்ந்த யாத்திரிகர்கள் - ஆடிவேல் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவம் கடந்த (19) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையை ஆரம்பித்த பக்தர்கள் திருத்தலத்தை சென்றடைந்துள்ளனர்.

அதற்கமைவாக சித்தர்கள் குரல் சமஸ்தானத்தின் பிரதம குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இலங்கையின் பல பாகத்திலும் இருந்தும் 1000 வேல்களுடன் வருகை தந்த  பத்தர்களுடன் கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை ஆரம்பமானது.

இதனிடையே, கிழக்கிலங்கையின் பிரசித்தி வாய்ந்த வேலோடு மலை ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட யாத்திரை அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அங்கிருந்து, உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட யாக பூசை மற்றும் பிரதான வேல்சாமியை தொடர்ந்து பாதயாத்திரையானது காட்டுவழி பாதையூடாக ஆரம்பிக்கப்பட்டு 6 நாட்களில் 18 யாக பூசை உள்ளிட்ட புனித கங்கைகளின் அபிஷேகங்கள் அனைத்தும் பிரதம குரு சிவசங்கர் ஜீ  தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சமசிவாயம் குரு ஜீ, மலேசியாவில் இருந்து வருகை தந்த குரு ஆகியோரின் பங்குபற்றுதலுடனும், அகில உலக  சித்தர்களின் குரல் சமஸ்தானத்தின் இலங்கை கிளையின் தலைவர் ஆதித்தியன், துணை தலைவர் மனோகரன் உள்ளிட்டோரின் ஏற்பாட்டிலும் சிவாகம முறைப்படி அனைத்து சிறப்பு பூஜைகளும் முன்னெடுக்கப்பட்டன. 

நாளாந்தம் காட்டுவழி பாதை ஊடாக பாதயாத்திரையாக சென்ற 1500 இற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், சிவசங்கர் குரு ஜீ உள்ளிட்ட பாதயாத்திரிகர்கள் 1000 வேல்களுடன், கந்தனின் ஆடி வேல் கொடியேற்றத்திற்கு சென்றடைந்ததுடன், யாத்திரையின் போது தாம் கந்தனை உணர்ந்ததாக யாத்திரிகர்கள் பக்தி பரவசத்துடன் தெரிவித்திருந்தனர்.

ஆடிவேல் உற்சவத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் கதிர்காம கந்தன் திருத்தலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் கடந்த (19) திகதி சிறப்பு பூஜை வழிபாடுகள்3ச நடைபெற்றன.

கதிர்காமத் திருத்தலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் (19) திகதி மாலை 5.00 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.  சர்வமத தலைவர்கள், கதிர்காம பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர உள்ளிட்ட அதிகளவிலான பக்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கதிர்காம கந்தனின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவில் இந்த ஆண்டுக்கான முதலாவது திருவீதி உலா கடந்த 19 திகதி நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது. கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ள நீர்வெட்டும் நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.