ஹரக் கட்டா 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு!

ஹரக் கட்டா 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

362 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த அவர் இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேநேரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த வழக்கு தொடர்பில் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அத்துடன், ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக்கவை தடுப்பு காவலில் இருந்து தப்பிக்க வைத்து அழைத்து செல்வதற்கு வந்ததாக கூறப்படும் மகிழுந்தின் சாரதியும் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

அதன்போது, அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், ஹரக் கட்டாவுடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷிக இன்றைய தினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மடகஸ்காரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் வைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாரியளவில் போதைப்பொருள் வரத்தகத்தை முன்னெடுத்து வந்தவர்கள் எனக்கூறப்படும் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து உட்பட எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தநாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.