வாகன புகை தொடர்பில் கவனம் செலுத்த தவறிய பொலிஸார்!

வாகன புகை தொடர்பில் கவனம் செலுத்த தவறிய பொலிஸார்!

போக்குவரத்து சட்டத்திற்கு பொருந்தாத உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த பொலிஸார், வாகன புகை பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என காற்று உமிழ்வு நிதியத்தின் இயக்குநர் தாசுன் கமகே கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துகளில் சுமார் 50% கடந்த ஆண்டு புகை சோதனையில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

செய்தித்தாளுக்கு அளித்த ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிகமான செலவில் புகை சோதனை உபகரணங்கள் வழங்கப்பட்ட சூழலில், அரசாங்க பேருந்துகள் புகை சோதனையில் தோல்வியடைந்துள்ளன.

வாகனங்கள் வெளியிடும் தீங்கு விளைவிக்கும் புகையால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் வாகன சோதனையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளே.

சாலை போக்குவரத்து சட்டத்திற்கு பொருந்தாத உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த போதிலும், வாகன புகை பிரச்சினையில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.6 மில்லியன் வாகனங்கள் புகை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

அவற்றில் 1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு, புகை சோதனையில் தோல்வியடைந்ததால் 225 வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை டீசல் வாகனங்கள்.” என அவர் கூறியுள்ளார்.