வட மாகாணத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் முடங்கின - நாளைய போராட்டத்திற்கும் தயார்நிலை!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அரசியல் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டை விட்டுச் சென்றமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு அதற்கான உரிய தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகளால் இன்றைய தினம் பணிநிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சட்டத்தரணிகள் பலர் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் சட்டத்தரணி ரீ.சரவணராஜா பதவி விலகியமைக்கு நீதிக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இரண்டு வாரங்களுக்கு கறுப்பு முகமூடிகளை அணிந்தவாறு நீதிமன்ற நடவடிக்கைகளில் எதிர்ப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டத்தரணிகளின் போராட்டம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்தப்பிதமடைந்திருந்தன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகியமை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி குறித்த நீதிபதி பதவி விலகியமைக்கான காரணம் தொடர்பில், சுயாதீன விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.
நீதிபதிக்கு சில தரப்பினரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உத்தரவை மாற்றியமைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இது, நீதிமன்றின் சுயாதீன தன்மையை பாதிக்கும் விடயமாகும். இதுதொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதற்கான அதிகாரம் காணப்படுவதாக தெரிவித்தார்.
இதன்படி, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் அளிக்கப்படும் முறைப்பாடுகளுக்கு அமைய, சுயாதீனமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.