தியாக தீபம் தீலிபனின் நினைவூர்தி பேரணி மீது காடையர்கள் தாக்குதல்!
திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் நினைவூர்தி பேரணி மீது சிங்கள காடையர்கள் இன்று (17) மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். திருகோணமலை சர்தாபுர பகுதியில் ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஊர்தியுடன் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து அவர் உயிர்நீத்த இடமான யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம், திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, திருகோணமலை - கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த பகுதியில் காவல்துறையினர், இராணுவ புலனாய்வுத்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததாகவும், காவல்துறையினர் தாக்குதலை தடுக்க தவறியதாகவும் அங்கிருந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த ஊர்வலத்தில், பயணித்தவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் திலீபனின் குறித்த ஊர்திக்கு நேற்றைய தினமும் மட்டக்களப்பு, மொறக்கொட்டான்சேனை பகுதியில் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சாதாரண எங்கள் நினைவேந்தலைக் கூட செய்ய முடியாத இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையை அரசாங்கம் வழங்கவேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.