பிள்ளையானுடன் பேசுவதற்கான ரணிலின் கோரிக்கை நிராகரிப்பு

பிள்ளையானுடன் பேசுவதற்கான  ரணிலின் கோரிக்கை நிராகரிப்பு

குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையானுடன் பேசுவதற்கான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசுவது சட்டவிரோதமானது என்பதால், அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.

விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து, ரணில் விக்கிரமசிங்கவை பிள்ளையானுடன் பேச அனுமதிக்குமாறு கோரினார்.

எவ்வாறாயினும், பிள்ளையானைச் சந்திப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்திரகாந்தனின் சட்டத்தரணி என்பதால் , அவருடன் பேச அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையிடம் கம்மன்பில கோரியிருந்தார்.