குடிநீரைத் தேடிச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அரியவகை உயிரினங்கள்!

தற்போது நிலவும் கடும் வறட்சி நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீரைத் தேடிச் செல்லும் கால்நடைகளும், வேறு விலங்கினங்களும், விபத்தில் சிக்குண்டு உயிரிழப்பதை அவதானிக்க முடிகின்றது.

குடிநீரைத் தேடிச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அரியவகை உயிரினங்கள்!

இதன்போது, அரிய வகை உயிரினங்களும் குடிநீரைத் தேடிச் செல்லும் போது  உயிர்களைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்மனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போதைய கடும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கால்நடைகள் உன்னிச்சை - மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாக தினசரி குடிநீருக்காகவும் உணவுக்காகவும், அலைந்து திரிவதனால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன.

வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ள தருணத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை திருடர்களும் மிகவும் சூட்சுமமான முறையில் களவாடிச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு நகரில் இருந்து மிக உயரமான இடத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் தினசரி காட்டு விலங்குகளும் தற்போது குடிநீருக்காக கிராமத்திற்குள் வரும்போது அவை வீதியில் செல்லும் கனரக வாகனங்களில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி உயிர்ழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை உன்னிச்சை பிரதான வீதியில் அரிய வகை மர அணில் ஒன்று இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்ததையும் அவதானிக்க முடிந்தது. 

அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளுக்கு வேண்டிய குடிநீரை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் முன்வர வேண்டும் என்று  அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நிலவும் கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 1800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வாகரை வடக்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு, உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள தங்களது விவசாயச் செய்கை, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட வாழ்வாதார தொழில்களும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.