தெற்கு அந்தமான் அருகில் காற்றழுத்த தாழ்வுநிலை - தற்போதைய நகர்வு - புதிதாக உருவாகும் 'சக்தி' சூறாவளி

தெற்கு அந்தமான் அருகில் காற்றழுத்த தாழ்வுநிலை - தற்போதைய நகர்வு - புதிதாக உருவாகும் 'சக்தி' சூறாவளி

வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் விரிவாக கூறுகையில், "தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது பலவீனமடைந்துள்ளது. 

இந்த தாழமுக்கம் கிழக்கு கடற்பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள ஆழமான கடலிலேயே நிலை கொண்டுள்ளது.

எனவே, அந்த பகுதியில் மாத்திரம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதன்போது குறித்த கடற்பகுதியில் தளம்பல் நிலை ஏற்படக் கூடும்.

குறிப்பாக காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இதன் மறைமுக தாக்கத்தால் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அதிகரிக்கக் கூடும். மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இங்கு 30 - 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்” என எச்சரித்துள்ளார். 

இதனிடையே, நேற்றைய தினம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவிய தாழமுக்க பகுதியானது, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து 5.8km உயரம் வரை தற்போதும் அதே பிராந்தியத்தில் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஓய்வு நிலை அதிகாரி சூரியகுமார் வௌியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் இது எதிர்வரும் 11ஆம் திகதியளவில் இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை வந்தடையும்.

இதன் தாக்கத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை கொண்ட காலநிலை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை வடகிழக்கு பருவப் பெயர்ச்சி பருவகாலமானது மேற்குறிப்பிடப்பட்ட நிலையுடன் படிப்படியாக விரித்தியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை மீண்டும் ஒரு நிகழ்வும்,  அதேபோன்று எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மூன்றாவது ஒரு நிகழ்வும்,

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நான்காவது ஒரு நிகழ்வும் உருவாகுவதற்கு சாத்தியம் உள்ளது. 

இந்த மூன்றாவது நிகழ்வான எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை உருவாகவிருக்கும் தாழமுக்கமானது, சில சந்தர்ப்பங்களில் காற்று பாதிப்பில்லாத ஆரம்ப நிலை சூறாவளியாக மாறும் சாத்தியமும் உள்ளது 

இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு நமது இலங்கைத் திருநாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட சக்தி (Shakhti) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.