சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தமிழ் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தின் போது கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அண்ணராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு கடல் ஊடாக தொடர்ச்சியாக அதிகளவிலான போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கடலூடாக இம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியக் கடற்படையின் உதவி அவசியமாகக் காணப்படுவதுடன் அது குறித்து இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சரிடம் தமிழ் கட்சிகள் கலந்துரையாடி எல்லைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிடம் 13வது திருத்தச் சட்டம் மற்றும் அரசியல் தீர்வு என்பன குறித்து தமிழ் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில், இந்த முறை சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரம் மற்றும் எல்லைத் தாண்டிய இந்தியப் மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சரிடம் பேச்சுவாரத்தை நடத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அண்ணராசா கோரிக்கை விடுத்துள்ளார்.