அதிக விலைக்கு அரிசி விற்பனை - இரவு நேரத்தில் விசேட சோதனை
கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் அரிசியை பதுக்கி வைத்திருக்கும் வர்த்தகர்களை கண்டறிவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை இரவு நேரத்திலும் விசேட சோதனைகளை முன்னெடுத்துவருகிறது.
கடந்த சில நாட்களில் நூற்றுக்கும் அதிகமான அரிசி தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இரவு நேரங்களில் சோதனைகள் நடத்தப்படாததால், பல வர்த்தக நிலையங்கள் மாலை மற்றும் இரவு வேளைகளில் அதிக விலைக்கு சிவப்பு அரிசியை விற்பனை செய்வதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அண்மையில் கருத்து வெளியிட்டார்.
அதன்படி, நேற்றிரவு ரத்மலானை பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாமல் தாங்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாக இதன்போது சில்லறை வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, 2024 – 2025 பெரும்போகத்திற்கான நெல் அறுவடை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், தங்களது நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தாங்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தங்களது வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு தற்போது உரிய விலை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
பெரும்போகத்தில் 3 இலட்சம் மெற்றிக் டன் நெல்லை கொள்வனவு செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அதற்காக நெல் களஞ்சியசாலைகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில், விவசாயிகளிடமிருந்து, வர்த்தகர்கள் 100 ரூபாய் முதல் 110 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் நெல்லை கொள்வனவு செய்கின்றனர்.
எவ்வாறாயினும், நெல்லுக்காக 140 ரூபா என்ற குறைந்தப்பட்ச உத்தரவாத விலை வழங்கப்பட வேண்டும் என தேசிய விவசாயிகள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.