இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்த சஜித் மற்றும் சரத்!

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்த சஜித் மற்றும் சரத்!

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, 76வது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

பாதுகாப்பு தரப்பினர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகளின் வருகையை தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் வருகை தந்ததுடன் இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வுக்கான பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ள தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவிசின் வருகையும் இடம்பெற்றது.

அவர்களை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலி முகத்திடலுக்கு வருகை தந்தார். அவரை பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் ஒற்றுமைக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் 77 கவச வாகனங்களுடன் 3,042 இராணுவ அதிகாரிகளும், ஏனைய தரவரிசை அதிகாரிகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், 7 கவச வாகனங்களுடன் 917 கடற்படை வீரர்களும் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 
இந்த வருட சுதந்திர தின அணிவகுப்பில் 299 காவல்துறையினரும் 209 காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் சிவில் பாதுகாப்பு படையை பிரதிநிதித்துவப்படுத்தி 379 பேரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தரைப்படையின் 179 ஆயுத வாகனங்கள் மரியாதை அணிவகுப்பில் பயன்படுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து முப்படையினர் மற்றும் காவல்துறையின் உத்தியோகத்தர்கள் 7,000அடி உயரத்தில் இருந்து பரசூட் ஊடாக தரையிறங்கிய சாகச காட்சி இடம்பெற்றது.

பின்னர், இறுதியாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு 76வது சுதந்திர தின நிகழ்வு நிறைவு பெற்றது.