காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட திட்டம்

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட திட்டம்

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டமொன்று புதன்கிழமை (27) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நியூசிலாந்தின் வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் சிறுவர் நிதியத்தின் ஊடாக யுனிட்டி லங்கா அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் செயற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி செல்வி ஆடித் ஹோஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.ஜி.முரளிதரன் கலந்துகொண்டதுடன் சிறுப்பு அதிதிகளாக சிறுவர் நிதியத்தின் வியாபார அபிவிருத்திக்கான பணிப்பாளர் டினன்த தம்பாவிற்ற, கிரான் பிரதேச செயலாளர் க.சித்திரவேல், புனானை 23 வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் நிலாந்த பிரேமரத்ன, முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாற்றமடைந்துவரும் காலநிலையிலிருந்து மிகவும் வறிய நிலையில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் சிறுவர்களுக்கான சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்தல், சுகாதாரத்தினை உறுதிப்படுத்தல், பாடசாலை மாணவர்களின் தேவைகளை உறுதிப்படுத்தல் என பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகப் பிரிவுகளான கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகள் இதன் கீழ் தெரிவுசெய்யப்பட்டு காலநிலை மாற்றங்களுக்கேற்ப சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.