ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றில் தீர்மானம்?

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானத்தை நாளை நாடாளுமன்றில் விவாதித்து நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றில் தீர்மானம்?

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறித்து தீர்மானம் எட்டுவதற்காக இன்று பிற்பகல் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை கலைத்து இடைக்கால நிர்வாகக்குழுவை நியமித்தமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரை நிகழ்த்தினார்.

இதன்போது, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் சார்பில் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், குறித்த கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி, நீதியமைச்சு, சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கணக்காய்வாளர் நாயகமும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது.

எனினும், அந்த குழுவுக்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவு தொடர்பான தகவல்கள் நேற்று முற்பகல் 11.10 அளவில் தமக்கு கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில், சட்டமா அதிபரை தொடர்பு கொண்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தாம் கோரிக்கை விடுத்ததாகவும், எனினும் அதற்கு உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.