ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை!
தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை, ஊவா மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், கருத்து தெரிவித்த அவர், மாற்று தினம் ஒன்றில் குறித்த பாடசாலைகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்தநிலையில், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்தார்.
இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையினை எதிர்வரும் சனிக்கிழமை (18) மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.