இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் மீது இஸ்ரேலில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் மீது இஸ்ரேலில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுனர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கோரியமைக்காகவே அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து பல வருடங்களாக இஸ்ரேலில் வாழ்ந்து, அங்கு சட்டவிரோதமான முறையில் தொழில் புரிந்த இலங்கை பிரஜை என்று குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலில் தங்கியிருந்த காலத்தில், பெண் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுக்கு இடையில் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.

எனினும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் மீண்டும் ஜோர்தான் எல்லையின் ஊடாக இஸ்ரேலுக்குள் பிரவேசத்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த பெண்ணின் மகளை கடத்திச்சென்றதுடன் இலங்கையில் உள்ள தமது தந்தைக்கு குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை வைப்பிலிட்டால் மாத்திரமே அவரை விடுவிக்கமுடியும் என்றும் இலங்கையர் அச்சுறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து பொலிஸார், வீடு ஒன்றுக்குள் பணயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டதுடன், இலங்கையரையும் கைது செய்தனர்.

இந்தநிலையில் பிரதிவாதியின் மீது நாடு கடத்தப்பட்ட பிறகு சட்டவிரோதமாக நாடு திரும்பியமை, மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், திருட்டு மற்றும் தேவையற்ற தாக்குதல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று இஸ்ரேலிய அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.