தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு - குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு - குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தவணைப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், பரீட்சை வினாத்தாள்கள் வெளியான மாகாணங்களில் மாகாண மட்டத்திலும் விசாரணை நடத்தப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், பரீட்சைக்கு முன்னதாகவே பரீட்சை தொடர்பான பல வினாத்தாள்கள் வெளியானமையினால் பரீட்சை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 10 மற்றும் 11 க்கான விஞ்ஞான பாடப் பரீட்சை அண்மையில் இடம்பெற்றதுடன், பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

அதேநேரம், சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை நடைபெறவுள்ள 10ஆம் தர ஆங்கில மொழி பரீட்சை வினாத்தாள் நேற்றைய தினம் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இதன்படி குறித்த இரண்டு பரீட்சைகளையும் இடைநிறுத்த மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மேல் மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த கணிதப் பாடம் தொடர்பான வினாத்தாள் மற்றும் அதன் விடைத்தாள் என்பனவும் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் எதிர்வரும் மூன்று நாட்களில் நடைபெறவிருந்த 10ஆம்  மற்றும் 11ஆம் தரங்களுக்கான இறுதித் தவணை பரீட்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார். 

பரீட்சை நடைபெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எனவும் அதுவரை நாளை முதல் பாடசாலைகள் வழமை போல இயங்கும் எனவும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வினாத்தாள் விநியோகம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாகவும் திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வினாத்தாள்கள் அச்சடிக்கும் பணிகள் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை என அரச அச்சக திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

வினாத்தாள்கள் விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.