ஹரக் கட்டாவின் இலங்கைக்கான போதைப்பொருள் நிர்வாகி கைது!

ஹரக் கட்டாவின் இலங்கைக்கான போதைப்பொருள் நிர்வாகி கைது!

தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவரும் ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவினுடைய, இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை நிர்வகித்துவந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகம - தெனிபிட்டிய பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

அதன்போது, முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டதுடன், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்து 58 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

எவ்வாறாயினும், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்ததுடன், விசாரணைகளின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டார்.

பின்னர் வெலிகம காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையை பெற்றுக்கொண்டனர்.

அதன்படி நேற்றைய தினம் குறித்த நபர் டுபாய் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை அதிகாரிகளினால் அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் இன்று காலை அவர் வெலிகம தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைப்படைக்கப்பட்டதையடுத்து, மாத்தறை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த நபரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர் வெலிகம மிதிகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கிரிபத்கொட பகுதியில் பத்து கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 9 கிலோகிராம் ஐஸ்ரக போதைப்பொருள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஐஸ்ரக போதைப்பொருள் சூட்சுமமான முறையில் சொக்கலட் பக்கற்றுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.