தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்த சுகாதார துறை - தாதியர் சங்கம் இணையவில்லை!
நாடு தழுவிய ரீதியில் இன்று காலை முதல் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
வைத்தியர்களுக்கான 35,000 ரூபாய் வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்க கோரி குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், அனைத்து சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளின் சேவைகள் வழமை போல் இடம்பெறும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணையவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக, வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபாய் கொடுப்பனவைக் கோரி சுகாதாரத் துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுவரையில் சந்தரப்பம் வழங்கப்படாததையடுத்து மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானத்துள்ளதாக 72 சுகாதார தொழிற்சங்கங்கள் அடங்கிய சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதா இல்லையா என்பதை நாளை பிற்பகல் கூடி தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
இந்தநிகழ்வில் குறித்த கூட்டமைப்பின் இணைப்பாளர் ரவி குமுதேஷ், இணை அழைப்பாளர் உபுல் ரோஹன, அரசாங்க சுகாதார முகாமைத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாமல் ஜயசிங்க, அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ ஆகியோர் கலந்து கொண்டனர்.