நீதிமன்றத்தில் கைகூப்பி மன்னிப்புக் கோரிய இலங்கை காவல்துறை துணைப் பரிசோதகர்!

நீதிமன்றத்தில் கைகூப்பி மன்னிப்புக் கோரிய இலங்கை காவல்துறை துணைப் பரிசோதகர்!

இலங்கை காவல்துறையின் துணைப் பரிசோதகர் ஒருவர், திறந்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூன்று பேரிடம் தலைவணங்கி மன்னிப்புக் கோரினார்.

2021ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் அனுமதியின்றி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு, கொள்ளுப்பெட்டி காவல்துறையுடன் இணைந்த குறித்த துணை பரிசோதகர், குறித்த தனியார் நிறுவனத்தில் உள்ளக ஒழுக்காற்று விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சாதாரண உடையில் ஆயுதம் ஏந்தியபடி, பல காவல்துறை அதிகாரிகளுடன் பலவந்தமாக நிறுவனத்திற்குள் நுழைந்தார்.

இதன்போது ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளுக்காக அங்கு பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட, நிறுவனத்தின் மனித வளத் திணைக்களத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் துணை பரிசோதகர் முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார்

இந்தநிலையில் இன்று தமது தவறை ஏற்றுக்கொண்டு அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

சிங்களப் பாரம்பரியத்தின்படி கைகளைக் குவித்து வணங்கி அவர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது காவல்துறை திணைக்களத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தெரிவித்தனர்

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அடிப்படை உரிமைகள் வழக்கைத் தொடர்ந்திருந்தால், சம்பவத்திற்கு இழப்பீடு கிடைத்திருக்கலாம் என்றும் நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே காவல்துறை அதிகாரிகள், தங்கள் கடமைகளின்போது விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தேவையற்ற அதிகாரத்தை வெளிப்படுத்தாமல் எச்சரிக்க வேண்டும் என்றும் நீதியரசர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதே இவ்வாறான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக நீதியரசர்கள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பிரதிவாதியான காவல்துறை அதிகாரியை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும் என்று  அறிவுறுத்தியது.