நாடு முழுவதும் சுகயீன விடுமுறை போராட்டம் மேற்கொள்ளும் அரச துறை!
நாடளாவிய ரீதியாக நாளைய தினம் (11) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்ச 20 ஆயிரம் ரூபாவை கொடுப்பனவாக வழங்குமாறு கோரி அந்த தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன், வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், 10,000 ரூபாய் கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், நாளை முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்தில் நோயாளர் பராமரிப்பு சேவையாளர்கள், கல்விப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஆகியோர் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மற்றும் கண்டியில் உள்ள அஞ்சல் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிராகவும், 20 ஆயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும் அஞ்சல் தொழிற்சங்கத்தினர், தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.