VAT எனப்படும் பெறுமதி சேர் வரி சட்டமூலம் 45 வாக்குகளால் நிறைவேற்றம்!

VAT எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்ட மூலம் 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

VAT எனப்படும் பெறுமதி சேர் வரி சட்டமூலம் 45 வாக்குகளால் நிறைவேற்றம்!

குறித்த வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில், இன்றைய தினம் விவாதித்து அது குறித்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு இன்று காலை தீர்மானிக்கப்பட்டது. 

அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்.

எனினும், குறித்த சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறுவதற்கு முன்னர், வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்கட்சிகள் சபையில், கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. 

அதன்பின்னர் வற் வரி திருத்தச் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. 

எவ்வாறாயினும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாம் வாக்கெடுப்பின் போது, சபையில் இருந்திருக்கவில்லை என தெரிவித்து, வாக்களிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். 

இந்தநிலையில், வற் வரி திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்தநிலையில், வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்ட மூலம் 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டது.

வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.

எனினும், அதன் நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

அதேநேரம், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.

இந்த வாக்கெடுப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

இந்தநிலையில், தற்போது 15 சதவீதமாக அறவிடப்படும் வற் வரியானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, வற் எனப்படும் பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக அறவிடப்படுமானால், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 63 ரூபாவினால் அதிகரிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்று வரும் கடற்றொழில் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ஒரு லீற்றர் டீசல் 346 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், வற் வரி தாக்கத்தினால் மேலும் 63 ரூபாவினால் அதிகரிக்கப்படும் நிலை உள்ளது. 

அத்துடன், விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் வற் வரி அறவிடப்படும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே கடற்றொழில் துறையினர் பாரிய பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், இது மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தில் மோசமான நிலையை உருவாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.