முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைத்துக்கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதாயிரத்தில் குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "கல்வி அமைச்சின் தரவுகளை ஆராயும் போது அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதையும் தெளிவாகக் காணமுடிகிறது.

கல்வி அமைச்சின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 304,105 ஆகும்.

2022ஆம் ஆண்டில், முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 11,889 ஆல் குறைந்து 292,216 ஆக காணப்பட்டது.

இதற்கிடையில், குடும்ப சுகாதார பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில், இலங்கையில் 258,235 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 30,719 பேர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.

இந்த தரவுகளின்படி, மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவர அறிக்கைகளின்படி, புதிதாக திருமணமான தம்பதிகள் கூட குழந்தைகளைப் பெறுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது" என கூறியுள்ளார்.