சீனாவில் கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!
சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண்சரிவால் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.