இலங்கையின் இன்றைய நிலைமைக்கு இவர்களே காரணம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அரச தலைவர்களும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருமே காரணம் என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் இன்றைய நிலைமைக்கு இவர்களே காரணம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நாட்டின் பொருளாதாரத்தையும், அரச கட்டமைப்பையும் தவறாக கையாண்டதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பல பிரதிவாதிகளே பொறுப்பு என்று இன்று (14) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகல மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மனுதாரர்களின் பொது நம்பிக்கை மற்றும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர்நீதிமன்றின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பெரும்பான்மை தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பான மனுவில்,கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலதிபர்களுக்கு 681 பில்லியன் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதுவே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பிரச்சினை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியின் போது 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பொருளாதார தவறான நிர்வாகப் பிரச்சினைகளையுமட மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த மனுவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹிம் மெண்டிஸ், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ஜூலியன் போலிங், ஜெஹான் கனகரத்ன மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை  மனுதாரர்கள் தலா 150,000 ரூபாவை நட்டயீடாக வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.