இன்று குருத்தோலை ஞாயிறு

இன்றைய குருத்தோலை ஞாயிறில் அன்னையாம் திரு அவை இயேசுவின் எருசலேம் வருகையை நினைவு கூறுகின்றது. இதுவே பரிசுத்த வாரத்தின் தொடக்க நாளாகவும் இருக்கின்றது.
இயேசு தம் சீடர்களோடு எத்தனை தடவை தான் பாஸ்கா பண்டிகை கொண்டாட எருசலேம் வந்திருந்தாலும், இன்றைய நாளில் இயேசுவின் எருசலேம் வருகை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
யூத மக்களும், தாம் காத்திருந்த விடுதலையை இயேசுவில் காண, பல எதிர்பார்ப்புகளுடன் தம் கைகளில் இருந்த ஒலிவ மரகிளைகளை உயர்த்தி அசைத்து ஓசன்னா ஆர்ப்பரித்து வரவேற்கின்றார்கள்.
தம் போர்வைகளை தரையிலிட்டு இயேசுவை வரவேற்ற அவர்களுக்கு, இயேசுவின் இறை ஆட்சியை விட அவரின் இவ்வுலக அரசாட்சியும், தாவீது மன்னனைப் போல உரோமையரிடமிருந்து தமக்கான விடுதலை தந்து தம்மை ஆளும் தலைவரே அவர்களுக்கு தேவைப்பட்டது.
வேதம் சொல்கிறது "மகளே சீயோன் மகிழ்ந்து களிகூறு! மகளே எருசலேம் ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்;அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின் மேல், கழுதை குட்டி ஆகிய மறியின் மேல் ஏறி வருகிறார் வருகிறவர்". (செக்கரியா 9 / 9)
ஆம் வேதம் சொல்வது சரியே! குதிரையில் வர வேண்டியவர் கழுதை குட்டியாகிய மறி மேல் வருகின்றார் என்றால், அவர் அதிகாரம் கொண்டு அடக்கி ஆளும் மன்னர் அல்ல மாறாக தன்னை தாழ்த்திக் கொள்ளும் இறை மகன். "பணிவிடை பெற அல்ல பணிவிடை புரியவே வந்தேன்". மாக் 10 /45 இயேசு தன் பணி, தன் தந்தையின் சித்தம் மற்றும் தன்னால் ஆகவிருக்கக்கூடிய மீட்புத் திட்டத்தை பற்றி தெளிவான பார்வையிலேயே இருந்தார்.
யூதர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் போரில் வென்று தம் நாடு திரும்பும் அரசரை ஒலிவமர கிளைகள் கொண்டு வரவேற்பதை தான் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றைய நாளிலும், இயேசுவின் எருசலேம் நோக்கிய வருகையானது வெற்றியின் வருகையாகவே பார்க்கப்படுகின்றது. அன்பார்ந்தவர்களே, தூய வாரத்தின் முதல் நாளாகிய இன்று, நாமும் இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை உள்ளத் தூய்மையோடு நினைவு கூர்ந்து அனுஷ்டிக்க அழைக்கப்படுகின்றோம்.
இறையாட்சியை மலரச் செய்ய இயேசுவின் இந்த வெற்றியின் வருகை எம் வாழ்விலும் புதிய விடுதலையை தர வேண்டும். காலம் காலமாய் தம்மை மீட்க, மீட்பர் வருவார் என எதிர்பார்த்த இஸ்ராயல் மக்கள், அன்றைய நாளில் தம் கைகளில் ஒலிவ மர கிளைகளைக் கொண்டு இயேசுவின் ஜெருசலேம் நோக்கிய வெற்றியின் வருகையை வெறுமனே அரசியல் வருகையாய் பார்த்து ஏமாற்றம் அடைந்தார்கள். அத்தோடு இயேசுவின் இந்த வருகையை தம் மீட்புக்கான இறை ஆட்சியின் வருகையாக பார்க்க தவறிவிடுகிறார்கள்.
இன்றும் நாமும், குருத்தோலைகளை கைகளில் ஏந்தி நிற்கின்றோம். குருத்தோலைகள் காட்டும் திறந்த மனநிலையையும் இயேசுவை பின்பற்றும் ஆர்வத்தையும் நம்மில் அவை தூண்ட வேண்டும். குறுகிய மனப்பான்மை உடையவராய் இந்த தூய வழிபாட்டு வாரத்தின் அர்த்தங்களை தொலைத்து விடாமல், அதன் உண்மையான பொருள் உணர்ந்து எம் வாழ்வை, இயேசுவின் தியாகம் நிறைந்த மறைநிகழ்வுகள் கொண்டு தூய்மையாக்குவோம். இந்த வாரம் என்பதே பரிசுத்த வாரம் தான்.
எடுக்கின்ற ஒவ்வொரு அடியிலும் கிறிஸ்துவை பின் செல்வோம். கிறிஸ்து எமகாய் துயருற்று பாடுபட்டு சுமந்து அறையப்பட்ட சிலுவையின் சாட்சிகளாய் மாறுவோம். “அவருடைய தழும்புகளால் குணமாகுகிறோம்." ஏசாயா 53/ 5