நரகமாக மாறிவரும் நன்பேரியல் சுற்றுலா தளம் - பயணிகள் குற்றச்சாட்டு!

நரகமாக மாறிவரும் நன்பேரியல் சுற்றுலா தளம் - பயணிகள் குற்றச்சாட்டு!

பலாங்கொடை - பெலிஹுல்ஓயா  நன்பேரியல் சுற்றுலா தளத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தேயிலை தோட்டங்கள், ஆற்றங்கரை, வனப்பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயற்பாடுகள் இயற்கை வளங்களை பாதிப்பதால் உயிர் ஆபத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதோடு பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் குடிநீரும் அசுத்தம் அடைவதால் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

அத்தோடு குறிப்பிட்ட பகுதியில் தொற்று நோய் பரவுவதற்கு அதிக சாத்தியம் உள்ளதாக குறித்த பகுதியை பார்வையிட வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நன்பேரியல் சுற்றுலா தளம் என்பது உலக புகழ் பெற்ற பகுதியாக திகழ்கிறது.  

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் இருந்து 21 km தூரம் செல்லும் போது இந்த நன்பேரியல் சுற்றுலா தளம் அமைந்துள்ளது.  

குறித்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான ஒரு பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ள நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உள்ள break bend வளைவு மற்றும் மேல்பகுதியில் 7000 அடி உயரத்தில் உள்ள நங்ரேன் பிரதேசத்தை பார்வையிட உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஒரு அவுஸ்திரேலியா பிரஜை சிறுநீர் கழிக்க சென்ற சந்தர்பத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.