அமெரிக்க வரி,நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷவின் ஆலோசனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளின் பின்னணியில், ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
டரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சிக்கல்களை ஒப்புக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா, இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை அவசர நிவாரண நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ஏற்றுமதியாளர்களுக்கான இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) நீக்குதலில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியின் முக்கிய நபராக இருந்தபோதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டறிய உதவ முன்வந்தார்.
புதன்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அனைத்து இறக்குமதிகளுக்கும் அடிப்படை 10 சதவீத வரியை விதித்து, அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறையை ஏற்படுத்தும் பல நாடுகளுக்கு கணிசமாக அதிக விகிதங்களை விதித்து, பரஸ்பர வரிகளை ஒரு விரிவான தொகுப்பாக அறிவித்தார்.
அதில், இலங்கை 44 சதவீத அளவுக்கு மிக உயர்ந்த வரிகளை எதிர்கொள்கிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வரி மாற்றங்களால் எழும் சவால்களை மதிப்பிடுவதும், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கான மூலோபாய நடவடிக்கைகளை முன்மொழிவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.