592 பேர் வீதி விபத்துக்களால் இந்த ஆண்டு உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் வீதி விபத்துகளில் சராசரியாக தினமும் 7 முதல் 8 பேர் வரை இறக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் தவலின்படி, 2024 டிசம்பர் நிலவரப்படி, இலங்கையில் 8,454,513 பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், அவை தோராயமாக 4.92 மில்லியன் ஆகும், அதே நேரத்தில் முச்சக்கர வண்டிகள் சுமார் 1.185 மில்லியன் பதிவுகளுடன் இரண்டாவது பெரிய வகையாகும்.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் 72% ஆக உள்ளன.
இதனால், அவை அதிக எண்ணிக்கையிலான வீதி விபத்துக்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.
ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் 2,231 விபத்துக்கள் நிகழ்ந்தன, இதன் விளைவாக 2,341 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில், ஏற்கனவே 2,403 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன இதன் மூலம் 2,521 பேர் உயிரிழந்துள்ளனர்.