மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!

மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!

நடிகர் டெல்லி கணேஷ் 81 வது அகவையை பூர்த்திசெய்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு திடீரென உயிரிழந்தார். 

சினிமாக்களில் மட்டுமல்லாமல் தொடர் நாடகங்களிலும் நடித்திருக்கும் டெல்லி கணேஷ் தனக்கு இருந்த மிகப்பெரிய வருத்தம் குறித்து விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசிய கா​ணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

டெல்லி கணேஷ் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி குரல் வழங்கும் கலைஞராகவும் பல வருடங்களாக சினிமாவில் நிலைத்திருந்தார். 

ஆனாலும் தமிழ் சினிமாவில் விருது வழங்குபவர்கள் யாரும் தன்னை போன்ற நடிகர்களை கண்டு கொள்வதில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

ஒரு சிலருக்கு திறமை இருந்தாலும் அதற்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. 

அதுபோன்றுதான் டெல்லி கணேஷ் வாழ்க்கைகளும் நடந்து இருக்கிறது. அவர் ஆரம்பத்தில் பத்து வருடங்களாக விமானப்படையில் பணியாற்றியிருக்கிறார். 

அதிலும் 1965 வது ஆண்டு காலகட்டத்தில் இந்திய சீனா போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கூட விமானப்படையில் அவர் பணியாற்றி இருந்தார். 

இதனால் தான் அவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயரே வந்தது. டெல்லி கணேஷின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். 

அவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானது பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். 

அதற்கு பிறகு பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்திருப்பார். 

ஆனால் அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் தான் இவர் வில்லனாக நடித்திருந்தார். 

அது மட்டும் அல்லாமல் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம் என்று பல திரைப்படங்களில் இவருடைய பாத்திரம் மற்றும் நடிப்பு பார்க்கும் ரசிகர்களை இப்போதும் பிரமிக்க வைக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் ஒரு யதார்த்தமான அப்பாவாக நடித்திருப்பார். 

அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம், கஸ்தூரி போன்ற தொடர் நாடகங்களில் நடித்திருந்தார். 

அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடர் கதையில்  மாரியின் தாத்தா நீலகண்டன் பாத்திரத்தில் நடித்து வந்தார். 

ஆரம்பத்தில் மர்மதேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, செல்லமே, வீட்டுக்கு வீடு லூட்டி, மனிதர்கள், திருப்பாவை, ஆஹா மனைவி, பல்லாங்குழி என்று பல தொடர் கதைகளில் நடித்திருந்தார். 

இத்தனை சீரியல்கள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நிகழ்ச்சியில் இவர் வருத்தமாக பேசிய வீடியோ இப்போது அவர் மறைந்த பிறகு வைரலாகி வருகிறது.

அந்த வகையில், டெல்லி கணேஷ்க்கு பெயர் வாங்கி தந்த சில படங்கள்

ராகவேந்திரர்

1985 ல் ராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஸ்ரீராகவேந்திரர் படம் எடுக்கப்பட்டது. ரஜினி கதாநாயகனாக நடித்த இப்படத்தில், ராகவேந்திர சுவாமிகளின் முதன்மை சீடர் அப்பனாச்சாரியார் வேடத்தில் நடிகர் டெல்லி கணேஷ் நடித்தார்.


சிந்துபைரவி

1985ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி கதாபாத்திரத்தில் மிருதங்க வித்வானாக டெல்லி கணேஷ் நடித்தார். அப்படத்தில் உண்மையான மிருதங்க வித்வான்கள் போல் நடித்து அவர்களின் முகபாவனைகள், உடல்மொழியை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படம் குறித்து டெல்லி கணேஷ் பேட்டி ஒன்றில் கூறுகையில், எனக்கு இசை தெரியாது. அதில் ஆர்வம், விருப்பம் உள்ளது. சங்கீத ஞானம் உண்டு. என் மீது முதலில் பாலச்சந்தருக்கு விருப்பம் இல்லை. மிருதங்க வித்வான் செய்வதை போன்று நான் செய்ததை பார்த்து பாலசந்தருக்கு பிடித்துவிட்டது. படம் வெளியான பிறகுபெங்களூருவில் அவரை சந்தித்தேன். சிந்துபைரவி படத்தில் உனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இவ்வளவு பெயர் வரும் என எதிர்பார்க்கவில்லை. நிறைய கடிதம் வருகிறது. அனைவரும் உன்னை பாராட்டுகின்றனர் என பாலச்சந்தர் தெரிவித்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

இதேபோன்று 1999ம் ஆண்டு ரகுமான் கதாநாயகனாக நடித்த சங்கமம் படத்திலும் மிருதங்க வித்வானாக டெல்லி கணேஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது.

நாயகன்

1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்து வெளியான 'நாயகன்' திரைப்படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழராக வேலு நாயக்கரின் இந்தி மொழி பெயர்ப்பாளராக பக்கபலமாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இந்த படம் தனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்ததாக டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வில்லன் வேடத்தில் பிரான்சிஸ் அன்பரசு என்ற கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்தார். இதிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

மைக்கேல் மதன காமராஜன்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமலின் வளர்ப்பு தந்தையாக, பாலக்காடு மணி ஐயர் என்ற வேடத்தில் நடித்தார். இதிலும் தன் வழக்கமான நகைச்சுவை முத்திரையை பதித்தார் டெல்லி கணேஷ்.

அவ்வை சண்முகி

இந்த படத்தில் சேதுராம ஐயர் வேடத்தில் ஜெமினி கணேசன் உதவியாளராக நடித்து இருப்பார். நாசரை கேள்வி கேட்கும் இடத்திலும், பெண் வேடத்தில் இருக்கும் கமலை கண்டுபிடிப்பதற்காக அவரை பின் தொடர்ந்து கூட்டத்தினர் மத்தியில் அடிவாங்கும் போதும் டெல்லி கணேஷ் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்

தெனாலி படத்தில் டாக்டர்

2000ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த தெனாலி படத்தில் டாக்டர் வேடத்தில் பஞ்சபூதம் என்ற கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்து இருந்தார். தன்னை விட புகழ் பெற்றவராக இருக்கும் ஜெயராம் மீது பொறாமை கொண்டு அவரை பழிவாங்குவதற்காக, தன்னிடம் மனநோய் சிகிச்சை பெற வந்த கமலை அவரிடம் அனுப்பி வைத்து இருப்பார். அதன் மூலம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் டெல்லி கணேஷ் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. படம் முழுதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.