மனித உடலில் உணரக்கூடிய அதிகூடிய வெப்பநிலை தாக்கம் -  எச்சரிக்கை!

மனித உடலில் உணரக்கூடிய அதிகூடிய வெப்பநிலை தாக்கம் -  எச்சரிக்கை!

இலங்கையின் சில மாவட்டங்களில் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கமைய,  குறித்த பிராந்தியங்களில் மனித உடலினால் உணரக்கூடிய அதிகூடிய வெப்பநிலை தாக்கம் நாளைய தினம் நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இடங்களில் வெப்பம், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' நிலை வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, 39-45 செல்சியஸ் வெப்பநிலை எச்சரிக்கை நிலையாகக் கருதப்படுகிறது.

எனவே மக்கள் அதிகளவு நீரை அருந்தவேண்டும் மற்றும் பணி செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வெப்ப அலைகளின் போது மக்கள் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

அதேநேரம் வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நோய் நிலையுள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.