உணவகங்களில் கழிவறைகளுக்கு பூட்டு : பொது மலசலக்கூடங்களுக்கான கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்!
உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை எவ்வளவு தூரம் உயரும் என்பதை சொல்ல முடியாது. பெரும்பாலும் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மலசலகூட வசதிகளை பயன்படுத்த முடியாத நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர் கட்டண அதிகரிப்பால் உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கொழும்பில் நடத்திய ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இவ்வாறு கூறியுள்ளார்.
“உணவகங்களில் கழிவறை பகுதிகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
திடீரென சிறுநீர் சுமையாக உணர்ந்தாலும் உணவகங்களுக்குச் சென்று சிறுநீரை கழிக்க முடியாது.
ஏனென்றால் கழிவறை தொட்டி நீரை திறந்தால் சுமார் 5 லீட்டர் நீர்வரை கழிவறை தொட்டினுள் இருந்து வெளியே செல்கிறது. இதனால் உணவகங்களில் கழிவறைகளை மூடிவைத்துள்ளனர்.
கடந்த காலத்தில் உணவக ஊழியர்கள் 5 நாட்கள் குளித்தார்கள் என்றால், தற்போது இரண்டு நாட்கள் மட்டுமே குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்களது சுகாதாரம் குறித்தும் கேள்விகள் எழும்பும்.
உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை எவ்வளவு தூரம் உயரும் என்பதை சொல்ல முடியாது.
இதற்கிடையில், பொது கழிப்பறைகளுக்கு அறவிடப்படும் கட்டணம் உயர்த்தப்படுமா என ஆய்வு செய்து பார்த்தோம்.
பொது மலசல கூடங்களை பயன்படுத்துபவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்பதால் கட்டணங்கள் திருத்தப்படும் என எதிர்பாக்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இருந்தபோதும், பொது மலசலக் கூடங்களுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இவற்றை நிர்வகிக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக பொது மலசலக்கூடத்தை பயன்படுத்துவதற்கு 40 ரூபா, 30 ரூபா, 20 ரூபா என அறவிடப்படுகிறது.
ஆனால், அதற்கு நிலையான கட்டணமொன்று நிர்ணயிக்கப்படவில்லை.
இதற்கான நிர்ணய கட்டணமொன்றை வெளியிட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு அடுத்த சில மாதங்களில் நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகர, நீர் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதிச் சாத்தியக்கூறுகளைப் பேணுவதுடன், நீர்க் கட்டணத்தை அடுத்த மீள்திருத்தத்தில் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 30 மற்றும் 50 சதவீதத்திற்கு இடையில் பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.