ஸ்மார்ட் மாணவனை உருவாக்குவது போன்றே ஸ்மார்ட் விவசாயியை உருவாக்குவதும் எமது நோக்கமாகும் - சஜித் பிரேமதாச

ரஜரட்ட பிரதேசத்தில் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவசாயிகளை இலக்காக கொண்டு ஸ்மார்ட் கல்வியைப் போலவே ஸ்மார்ட் விவசாயத்தை உருவாக்கி, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நிலத்தில் உயர் தரமான உற்பத்தியைப் பெற்று, உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது ஏற்றுமதிக்கு உகந்த பயிர்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை அவர்களுக்கு வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் பயிரிடுவதற்கு ஏற்ற சூழல் இல்லாவிட்டாலும் பயிரிடுவதில் சிறந்து விளங்குகின்றனர். 

சொட்டுநீர் பாசனம், பசுமைக் குடில், முடாக்கு போன்ற முறைகளைப் பயன்படுத்தி வருகிறது. 

இரண்டு பருவங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட நம் நாட்டின் விவசாய சுழற்சியை வலுப்படுத்தி, ஒரு இடைப்பட்ட பருவத்தில் மேலதிக செய்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும்.  

விவசாயிகளின் பயிர்களுக்கு நிலையான விலை கிடைக்க வேண்டும். களஞ்சியங்கள் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். 

இதன் ஊடாக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 175 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், மிஹிந்தலை, திரப்பனை, அதுங்கம, கெமுனு வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 05 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலையின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுக்களுக்கு ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் வழங்கி வைத்தார்.

நமது நாடு 100 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது. கடன் சுமை காரணமாக பல குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்துள்ளனர். 

மக்கள் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். மக்களின் துன்பத்தை அறிந்த தலைவராக, வாய்ச்சவடால் தலைவர்கள் போலன்றி செயல்படும் தலைவராக மாறுவேன்.  

இந்த வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதே ஒரே தீர்வு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

41 இலட்சம் பாடசாலை பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்நாட்டிலுள்ள எந்தவொரு தலைவரும் வழங்காத அற்புதமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஏமாற்றுத் தலைவரின் பக்கம் சென்றதன் காரணமாக நாடு வங்குரோத்தானது. 

எனவே 2024 ஆம் ஆண்டிலாவது ஸ்மார்ட் நாட்டை உருவாக்க நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

அதிகாரம் இல்லாமல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் உதவியைப் பெற்று பிரபஞ்சம் மற்றும் மூச்சு திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

 கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அரசு ஒதுக்கும் பணத்தை வைத்து இந்த துறைகளை மேம்படுத்த முடியாது. 

இந்த அசாதாரண சூழ்நிலையில் சட்டகங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் புதிய வழியில் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.