வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம், மக்களை ஏமாற்றும் கும்பல்!! - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம்,  மக்களை ஏமாற்றும் கும்பல்!! - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

பிரமிட் திட்டங்களுக்கு இரையாகும் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் புதிய தொழில்நுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

"உங்கள் கையில் பணம் இருந்தாலும், நிதி கல்வியறிவு மற்றும் அதைப் பற்றிய அறிவு இல்லாதது, அந்தப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிக்கு ஆளாக அதிக வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக இணையத்தில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதைப் பார்க்கிறோம். தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அது தொடர்பில் மின்னஞ்சல்கள் வருகின்றன. 

அண்மை காலமாக, மரம், பழங்கள் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை வளர்ப்பதன் ஊடாக அதிக பணம் சேகரிக்க முடியும் என்ற பெரிய அளவிலான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

முதலீடு என்ற போர்வையில் உங்கள் கையில் உள்ள பணத்தை மோசடியாகப் பெற்று, அந்தப் பணத்தை பிரமிடுகளிலோ அல்லது அங்கீகரிக்கப்படாத வைப்புத்தொகைகளிலோ வைப்பதன் மூலம் பணத்தை இழக்கும் போக்கு உள்ளது. 

எனவே, இவ்வாறு அதிக இலாபம் கிடைக்கும் என்று கூறுபவர்களிடன், நீங்கள் முதலில் கேட்க வேண்டியது, குறித்த முதலீட்டில் எவ்வாறு இவ்வளவு பெரிய நன்மையை பெற முடியும் என்பதுதான்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களின் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மத்திய வங்கியால் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"முக்கியமாக, டிஜிட்டல் மயமாக்கலின் சில எதிர்மறை அம்சங்களுக்கு ஒரு முக்கிய காரணம் நிதி கல்வியறிவு மற்றும் பொருளாதார கல்வியறிவு இல்லாததுதான்.

அப்படியானால், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் கல்வியறிவு இல்லாததால், மக்கள் தவறுகளைச் செய்ய நேரிடும்.

எனவே, மத்திய வங்கி மூலம் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் அதே வேளையில், நிதி கல்வியறிவு குறித்த சிறப்புத் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்." என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.