கொழும்பில் தெருவில் சென்ற நீதிபதியை ஓரமாக நிற்குமாறு பணித்த பொலிஸ்!! பொலிஸ்மா அதிபரையும் நீ யார்? எனக் கேட்டார்!! நடந்தது என்ன?
பொலிஸ்மா அதிபரை கூட, நீங்கள் யார்? என பொலிசார் கேட்கும் வகையில், குழப்பமான ஒரு நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு வருந்துவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லஃபர் தாஹிர் நேற்று (1) திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
தனியார் நிறுவனத்தின் உள் தணிக்கை நடந்து வந்த சந்தர்ப்பத்தில், அந்த நிறுவனத்துக்குள் ஆயுதங்களுடன் தன்னிச்சையாக புகுந்த கொள்ளுப்பிட்டி நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த இடத்தைத் தாக்கி துன்புறுத்துதல் மற்றும் கலவரம் செய்த சம்பவம் தொடர்பில் நடந்த விசாரணையின் இறுதியில், மனுதாரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவுரை கூறும் போதே நீதிபதி இவ்வாறு கூறினார்.
பொலிஸாரை அவமதிக்கும் வகையில் பொலிஸாரையும் பொதுமக்களையும் துன்புறுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக இந்த எச்சரிக்கை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு எதிராக ‘சுமதி தகவல் தொழில்நுட்ப தனியார் நிறுவனம்’ தாக்கல் செய்த ரிட் மனு, மொஹமட் லபார் மற்றும் கேமா ஸ்வர்ணாதிபதி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லாஃபர் திறந்த நீதிமன்றத்தில் தொடர்ந்து குறிப்பிடுகையில் , நடைபாதையில் நடைபயிற்சிக்காக சென்ற போது, வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை தடுத்து நிறுத்தி, ‘யார்? நீ? என கேட்டதாகவும், தனது நீதிபதி அடையாள அட்டையைக் காட்டியபோது அடையாள அட்டையைப் பார்த்த பொலிஸ்காரர், அந்த இடத்தில் நிற்குமாறு கூறியதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
“நான் அந்த இடத்திலிருந்து பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் அழைத்தேன்.
பின்னர் அந்த பொலிஸ்காரருடன், பொலிஸ்மா அதிபர் பேசினார். அப்போது அந்த பொலிஸ்காரர், ‘நீங்கள் யார்?’ என பொலிஸ்மா அதிபரை வினவினார். பொலிஸ் மா அதிபரைக் கூட அவருக்குத் தெரியாது. நீங்கள் யார் என்று பொலிஸ்மா அதிபரிடம் கூட பொலிசார் கேட்கும் நிறுவனமாக இது மாறிவிட்டது. இதுவே பாதாள உலகத்தைப் போன்ற பொலிசாரின் நடத்தை குறித்த கோபம். மிகவும் வருந்துகிறேன்” என நீதிபதி கூறினார்.
“மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான எனக்கு இது நடந்தால், சாதாரண மக்களின் கதை என்ன?” என்றார் நீதிபதி.
சுமதி தகவல் தொழிநுட்ப தனியார் நிறுவனம் சமர்ப்பித்த மனுவின் பிரகாரம் கொள்ளுப்பிட்டி பொலிஸ் உப பரிசோதகர், சார்ஜன்ட் ஏகநாயக்க, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் நிறுவனத்தின் ஒழுக்காற்று விசாரணையில் தொடர்புடைய ஒரு சட்டத்தரணி மற்றும் இரண்டு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மற்றும் அரசாங்க சட்டத்தரணி ஆகியோர் இந்த மனுவை தீர்ப்பதற்கு தயார் என நீதிமன்றில் தெரிவித்தனர். இதன்படி, கொள்ளுப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர், திறந்த நீதிமன்றில் மனுதாரரின் பிரதிநிதிகளிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரியதுடன், தனது வருத்தத்தையும் தெரிவித்தார். பின்னர் மனு மீதான விசாரணை முடிவடைந்தது.