மின்விசிறியில் மோதி உயிரிழந்த மாணவர்: பாடசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!
நுவரெலியா - புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதி, பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது, குறித்த மாணவன் பிற்பகல் வேளை வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடிய போது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மாணவன் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கிலென்லொக் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவனை ஒரு மணித்தியாலத்தின் பின்னரே வைத்தியசாலையில் அனுமதித்ததாக குறித்த சிறுவனின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். அத்துடன், புஸ்ஸல்லாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் அவருக்கு அங்கு முறையாக சிகிசை்சையளிக்கப்படலவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும், புஸ்ஸல்லாவை பொலஸ் பொறுப்பதிகாரி குறித்த சிறுவனின் பெற்றோரை அழைத்து இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கும் முறைமை தொடர்பில் விளக்கமளித்துள்ளார். எனினும், குறித்த சிறுவனின் உறவினர்கள் பாடசாலை வளாகத்துக்கு முன்பாக கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.