பெண்ணொருவரின் மூளையில் இருந்து 3 அங்குல புழு உயிருடன் கண்டுபிடிப்பு!
உலகில் முதன்முதலாக சத்திர சிகிச்சையின் போது அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 8 செ.மீ (3 அங்குல) புழு ஒன்று உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போது இங்கிலாந்தில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் பெண் ஒருவரின் மூளையில் சேதமடைந்த முன் மடல் திசுக்களில் இருந்து "சரம் போன்ற அமைப்பு" வெளியேற்றப்பட்டது.
அதன் பின்னரே குறித்த அமைப்பு புழு என்று கண்டறியப்பட்டது.
சத்திரசிகிச்சை அறையில் இருந்த அனைவருக்கும் இந்த விடயம் அதிர்ச்சியாக இருந்தது என்று அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெரா பகுதியில் உள்ள தொற்று நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் சஞ்சய சேனாநாயக்க என்பவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் பெரும் ஆபத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த பெண், தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் கீரைகளை சேகரித்த போது இந்த புழு அவரிடம் தொற்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வயிற்று வலி, இருமல், இரவு வியர்த்தல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டன.
அத்துடன் இது மறதியை அதிகரித்து மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நோயாளி 2021 ஜனவரி மாத பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஸ்கேன் செய்ததில் "மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம்" கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் 2022 ஜூன் மாதத்தில் குறித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதே, அவரின் நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் மருத்துவ ரீதியாக ஒரு வரலாற்றை உருவாக்கினாலும் பாதிக்கப்பட்ட பெண் நன்றாக குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மொழியில் ஒஃபிடாஸ்காரிஸ் ரொபர்ட்ஸி (Ophidascaris robertsi) என அழைக்கப்படும் பாம்பு வகையை சேர்ந்த இவ்வகை புழுக்கள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படும்.
குறித்த பெண்ணின் வாழ்க்கை முறைக்கோ, தொழிலுக்கோ பாம்புகளோடு எந்த தொடர்பும் இல்லையென்றாலும் அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள ஏரியில் பாம்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அதிகமாக உணவுக்காக பெற்ற நியூசிலாந்து கீரை வகைகளில் அந்த புழுவின் முட்டைகள் இருந்து அவர் அதனை உண்ணும்போது உள்ளே சென்று, புழுவாக உயிர் பெற்று, இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சென்று, அங்கேயே உயிர் வாழ்ந்து இருக்கலாம் என மருத்துவர்கள் யூகிக்கின்றனர்
"உயிருள்ள புழு ஒருவரின் மூளையில் வாழ்வது இதுதான் உலகிலேயே முதல்முறை. ஆனால் இதுபோன்ற மருத்துவ பிரச்சினைகள் எதிர்காலத்திலும் வரக்கூடும்" என மருத்துவ குழுவிற்கு ஆலோசகராக செயல்பட்ட மருத்துவர் சஞ்சய சேனநாயக தெரிவித்துள்ளார்.
மருத்துவ துறையில் எத்தனையோ நவீன சிகிச்சை முறைகள் வந்திருந்தாலும், சில அரிய மற்றும் உலகிலேயே புதுவகை நோய்களும், உடல் குறைபாடுகளும் தோன்றிக் கொண்டே இருக்கும் எனவும் இதுகுறித்து முதலில் தகவல் வெளியிட்ட அமெரிக்காவிலுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centre for Disease Control and Prevention) தெரிவிக்கிறது.