கட்டுநாயக்கவில் கைதான தம்பதி : பின்னணி காரணம் என்ன?

கட்டுநாயக்கவில் கைதான தம்பதி : பின்னணி காரணம் என்ன?

இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் வந்த போது கைது செய்யப்பட்ட கணவனும் மனைவியும் எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான தம்பதியினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

விசாரணையில், அதன் இயக்குனர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021ல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டு விசாரணையின் போது சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் தரையிறங்கிய போது நாட்டின் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

முதலாவதாக, குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் இலங்கைக்கு வந்தவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்கிடமான பெண் இலங்கைக்கு வரமுடியாது என்று கூறி குழப்பம் ஏற்படுத்தியதன் காரணமாக வேறு விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, விமான நிலையத்தில் வைத்து அவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையின் போது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்றும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களை இலக்கு வைத்து இந்த சட்டவிரோத செயல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டமையினால் ஈவுத்தொகை வழங்குவதை தவிர்த்துவிட்டு தீவை விட்டு வெளியேறியதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர்கள் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அவர்களின் 14 வயது பிள்ளை பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.