ஐவர் கொலை சந்தேகத்தில் ஒருவர் கைது
5 வயோதிபர்கள் படுகொலை - சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது!
நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கனடா குடியுரிமையைக் கொண்ட, 50 வயதான குறித்த இலங்கையர், நெடுந்தீவில் உள்ள கொலை நடந்த வீட்டிற்கு வந்து சென்றதாக காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு jகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
100 வயதான கனகம் பூரணம் என்ற வயோதிபப் பெண் பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (83) , மகாதேவன் (வயது 75) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.