கருப்பு ஜனவரி ஆரம்பத்தில் கிழக்கிலும், தெற்கிலும் லசந்தவிற்கு நினைவேந்தல்!
பதினாறு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரை நினைவுகூரும் வகையில் தலைநகரிலும் கிழக்கிலும் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பு நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் ஜனவரி 8ஆம் திகதி தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் அப்பகுதி அரசியல்வாதிகள் சிலருடன் இணைந்து கடந்த காலத்தில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட இந்த மாதம் ‘கருப்பு ஜனவரி’ என அழைக்கப்படுகிறது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் மட்டு ஊடக அமையம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தையும் நினைவேந்தலையும் ஏற்பாடு செய்திருந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய ஆட்சியின் கீழும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வாலசிங்கம் கிருஷ்ணகுமார் குற்றம் சுமத்தினார்.
“காலத்திற்கு காலம் பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதை தவிர்த்து மேலும் மேலும் ஊடகவியலாளர்களை அடக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊகடவியலாளர்களின் படுகொலைகளுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் எனக் கூறிய, ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.”
வடக்கிலும் தெற்கிலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த அரசாங்கத்தின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
“அண்மையில் அம்பாறையிலும், கிளிநொச்சியிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உண்மையை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. ஆகவே இந்த ஆட்சியிலாவது லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி படுகொலை செய்யப்பட்ட, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட, நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.”
44 ஊடகவியலாளர்கள்
இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) தொகுத்துள்ள அறிக்கைக்கு அமைய, 2004-2010 வரையான ஆறு வருடங்களில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 44 ஆகும்.
அவர்களில் பெரும்பாலானோர் வடக்கிலிருந்து தமிழ் ஊடகவியலாளர்கள். அவர்களில் எவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை பொரளை பொது மயானத்தில் நினைவுகூர்ந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நநெலிகொடவின் மனைவியும் சர்வதேச விருது பெற்ற மனித உரிமை செயற்பாட்டாளருமான சந்தியா எக்நெலிகொட, பட்டப்பகலில் வீதியில் வைத்து கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்கவுக்கு எந்தவொரு அரசாங்கமும் நீதியை வழங்காத நிலையில், தொடர்ச்சியாக போராட்டக் களத்தில் இருந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடுத்து வருட ஆரம்பத்திற்கு முன்னதாக நீதியை வழங்குமென நம்பிக்கை வெளியிட்டார்.