காவல்துறை ஆணையாளர் நாயகம் பதவியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!
காவல்துறை ஆணையாளர் நாயகம் பதவியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் இன்னும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளதாகவும், அமைச்சரவைக்கு அறிவித்த பின்னர் எதிர்காலத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஆணையாளர் நாயகம் பதவி என்பது ஜனாதிபதியால் நிறுவப்படும் ஒரு சிவில் பதவியாகும்.
எவ்வாறாயினும், அந்த பதவிக்கு நியமிக்கப்படுபவரிடம், காவல் துறை நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.
இதன்படி, முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, பதில் காவல்துறைமா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பதவி காலம் 3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பெயர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.