ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழல் பற்றி பேசுவதால் தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை - ரொஷான் ரணசிங்க!

விளையாட்டுத்துறை அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழல் பற்றி பேசுவதால் தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை - ரொஷான் ரணசிங்க!

தமக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு மத்தியஸ்தம் செய்யுமாறு நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை முதல் ஆளும் தரப்பின் பிரதம அமைப்பாளருடன் தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்குவதற்கு முயற்சித்த போதிலும் அது தோல்வியுற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

 விளையாட்டுத்துறை அமைச்சின் குழுநிலை விவாதத்தில் தம்மை பேசவிடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் வழங்குமாறும் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழல் பற்றி பேசுவதால் தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். 

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இன்றைய தினத்திற்குள் நேரம் வழங்குவதாக தெரிவித்தார்.

 இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு உரையாற்ற ஆளும் தரப்பில் நேரம் ஒதுக்கவில்லையாயின், எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து நேரத்தை ஒதுக்குவதற்கு தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை, தமக்கு ஒதுக்கப்பட்ட பத்து நிமிடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.