உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அவுஸ்திரேலியா அணி!
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவாகியுள்ளது.
கொல்கத்தாவில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 தசம் 4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, டேவிட் மில்லர் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில், 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரெவிஸ் ஹெட் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
முன்னதாக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தெரிவான நிலையில் அவுஸ்திரேலியா அணி தமது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.