அரங்கு நிறைந்த மக்கள் | இலண்டனில் தூவனம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி

1 / 1

1.

அரங்கு நிறைந்த மக்கள் | இலண்டனில் தூவனம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி

அரங்கு நிறைந்த மக்கள்மத்தியில் இலண்டனில் தூவனம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிடல் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

கிளி பீப்பிள் அமைப்பு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்க இலண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு பார்வையாளர்கள் பெருமளவு திரண்டு வரவேற்பு அளித்திருந்தனர்.

இந்த நிகழ்வுமூலம் கிடைக்கின்ற நிதியானது வடக்குக் கிழக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயன்பட உள்ளது. கிளிபீப்பிள் அமைப்பு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையுடன் இணைந்த இந்த முயற்சியை முன்னெடுக்கின்றது. 

வைத்திய நிபுணர் சிவன் சுதன் தயாரிப்பில், கலாநிதி ரதிதரன் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்த ஈழத் திரைப்படமே தூவானம். ஈழத் தமிழரின் வாழ்வியல் கதையைப் பேசும் இந்த திரைப்படம், இலண்டன் சிறப்புக் காட்சியிடலில் அனைவரது மனங்களையும் கவர்ந்தது.

யுத்தத்தினால் அலைவுற்று, புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தாய் நிலத்தில் செய்ய வேண்டிய பணிகளையும் ஆற்ற வேண்டிய செயல்களையும் எடுத்துரைக்கும் இப் படம், புலம்பெயர் தேச உறவுகளின் உழைப்பின் மகத்துவத்தையும் பேசுகிறது.

இதேவேளை முழுக்க முழுக்க இந்தத் திரைப்படத்தில் ஈழக் கலைஞர்கள் நடித்திருப்பது மற்றொரு சிறப்பு செய்தியாகும். இது முக்கியப்படுத்த வேண்டிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாகவும் பார்வையாளர்களிடம் வெளிப்பட்டது.

இலண்டனில் இடம்பெற்ற சிறப்புத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளர் வைத்திய நிபுணர் சிவன்சுதன் தாயகத்தில் இருந்து வந்து கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இத்துடன் இந் நிகழ்வில், யாழ் பல்ககலைக்கழக முன்னாள் மருத்துவபீட பீடாதிபதியும் சத்திரசிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ். ரவிராஜ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உருவாகத்திலும் முன்னின்று பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலத்தில் ஈழத்து சினிமா மீண்டும் மிடுக்குடன் தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. அதில் தூவானமும் குறிப்பிடத்தக்க படமாக அமைகின்றது. ஈழச் சினிமாவின் தனித்துவ அடையாளத்தை பாதுகாக்கும் பயணம் சிறப்புடன் தொடரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதை தூவானம் படமும் இலண்டன் சிறப்புத் திரையிடலும் கட்டியம் கூறுகிறது.