ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்படும் நிலைமை - தமிழ் தேசியத்தில் ஹர்த்தால்!

தொல்லியல், வனவிலங்கு, வனஜீவராசிகள், மகாவலி என்றெல்லாம் பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சரியான நியாயமான தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற போது நீதிபதிகள் அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக அச்சுறுத்தப்படுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. 

இதனைக் கண்டிக்கும் முகமாக எதிர்வரும் 20ம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு சகலரும் ஒத்துழைப்பைத் தரவேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் முகமாக இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், டெலோ சார்பில் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபைப் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், புளொட் சார்பில் முன்னாள் மண்முனை மேற்குப் பிரதேச சபை பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை, ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பில் அதன் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கட்சிகளின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறையில் பணியாற்றிய நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல், அழுத்தம் என்பவற்றினால் இந்த நாட்டில் அவருக்குப் பாதுகாப்பு இல்லை.

இதன் காரணமாக அவர் தற்போது இந்த நாட்டை விட்டே வெளியேறி இருக்கின்றார். 

ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீர்ப்பு வெளியிட்ட நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் இருக்கின்றது என்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. 

ஒரு நீதிபதி தனது பாதுகாப்பின்மை காரணமாக வெளிநாடு சென்றுள்ளார் எனில், நீதித்துறை சரியான நடுநிலையான முறையில் செயற்பட்டு முறையான தீர்ப்புகளை வழங்குவதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. 

இதனைக் கண்டிக்கும் முகமாக வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் பேசுகின்ற சமூகம் அனைவரும் இணைந்து எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஜனநாயகத்தையும், மனித உரிமையையும், சட்டவாட்சியையும், நீதித்துறையின் கௌரவம் என்பவற்றையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஹர்த்தாலை அனுஸ்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழத் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நாங்கள் முன்வைக்கின்றோம்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வர்த்தக சங்கம், அரச ஊழியர்கள், பொதுமக்கள், போக்குவரத்து சார்ந்தவர்கள் என அனைவரையும் வேண்டி நிற்கின்றோம். 

இந்த நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி இல்லாமல் இனநாயக ஆட்சி நடைபெறுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கும். சட்டவாட்சி, மனித உரிமை என்பவற்றைப் பாதுகாப்பதற்காகவும் இதனைச் செய்கின்றோம்.

இந்த நாட்டில் தொல்லியல் திணைக்களம் என்று சொல்லிக் கொண்டு எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. 

அதேபோன்று வனவிலங்கு, வனஜீவராசிகள், மகாவலி என்றெல்லாம் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சரியான தீர்ப்புகளை வழங்குகின்ற அல்லது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நியாயமான தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற போது நீதிபதிகள் அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக அச்சுறுத்தப்படுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. 

இதன் காரணமகவே குறித்த நீதிபதி வெளிநாடு செல்ல நேரிட்டுள்ளது.

இந்த விடயங்களை சகலரும் அறிவார்கள். எனவே வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்ற பூரண ஹர்த்தால்,  கடையடைப்பு என்பவற்றிற்கு சகலரும் ஒத்துழைப்பைத் தரவேண்டும். இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேட்கின்றோம். 

ஒற்றுமையான இந்தக் குரலுக்கு அனைவரும் செவிசாய்ப்பீர்கள் என்று நம்புகின்றோம்” என்று தெரிவித்தார்.