மனம் நொந்த சிரேஸ்ட புற்றுநோயியல் நிபுணர் விருப்ப ஓய்வு பெற தீர்மானம்!
கராப்பிட்டிய - போதனா வைத்தியசாலையில் அண்மையில் சிற்றூழியர்களை தாக்கிய சம்பவத்தால் மனம் நொந்த வைத்தியசாலையின் சிரேஸ்ட புற்றுநோயியல் நிபுணர் கிரிசாந்த பெரேரா விருப்ப ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
அவரது ஓய்வுக்கான கடிதம் ஏற்கனவே சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட புற்றுநோயியல் வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் விசேட வைத்தியர்கள், குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியர் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடைநிலை ஊழியர் கொடுத்த முறைப்பாட்டின் மீது மட்டும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரை தாக்க முயற்சித்தமைக்காக, மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக நிறுவன மட்டத்தில் பொலிஸார் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அரச மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது.
61 வயதான மருத்துவர் கிரிசாந்த பெரேரா, புதன்கிழமை காலை ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஒன்றின் போது பெண் இளநிலை ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
வைத்தியசாலையின் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், புற்றுநோயியல் நிபுணரால் தாக்கப்பட்டதாகக் கூறி, பெண் கனிஸ்ட ஊழியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சிரேஸ்ட புற்றுநோய் நிபுணருக்கு நீதி கோரி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவு வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிகள், நோயாளிகள் பிரதேசவாசிகள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.