சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை நேற்று (24) பிற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு ஒரு மணி நேரம் இடம்பெற்றது. 

இச்சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் செல்வி. சன் ஹையன் இடையில் 45 நிமிட நேருக்கு நேர் பிரத்தியேக சந்திப்பும் இடம்பெற்றது.

பொருளாதாரம், வர்த்தக, அரசியல் உறவுகள் என பல துறைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இங்கு, சீனாவின் பொருளாதார அபிவிருத்தி மாதிரியை கருத்திற் கொண்டு, எமது நாட்டிற்கு தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டு வரக்கூடிய முறை குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதன்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத் தலைவர்கள், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதால், அதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் குழுவினரிடம் தெரிவித்ததுடன், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியைக் கட்டியெழுப்ப தானும், ஐக்கிய மக்கள் சக்தியும் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் மத்தியக் குழுவின் துணை அமைச்சர் செல்வி.சன் ஹையன் (Sun Haiyan) அவர்கள், சீனத் தூதுவர் Qi Zhenhong, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் Li Jinyan, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் Lin Tao, அதன் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான திருமதி வென் ஜுன், இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் ஆலோசகர் சென் சியாங்யுவான், துணை அமைச்சரின் செயலாளர் ஜின் யான், தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணிபுரியும் திரு ஜின் என்சே மற்றும் மொழிபெயர்ப்பாளர் திரு.ஜாங் ஹுயு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வாறே, ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஹர்ஷன ராஜகருணா மற்றும் நளின் பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.