முன்னாள் கிரிக்கெட் வீரரின் திட்டத்திற்கு மத்திய வங்கி எச்சரிக்கை!
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார் தர்மசேனவின் பெருந்தோட்ட நிறுவனமான “பின்னெத்த பிளாண்டேசன்“ நிறுனத்தில் முதலீடு செய்வதற்கு பொது மக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்வதற்கான மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இல்லையென “மகேரட்ட அமைப்பின்“ தலைவர் மத்திய வங்கியின் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க நிதி வர்த்தக சட்டத்தின் இரண்டாவது பிரிவின் விதிகளை மீறி மக்களை தவறாக வழிநடத்தி பண வைப்புக்களை பெற்று வருவதாகவும் மேற் குறிப்பிட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரித்து பண சோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் தொடர்ந்தும் மக்களிடம் இருந்து பணம் வைப்புகளை பெற்று வருவதாகவும், குறித்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யும் பொது மக்களை பாதுகாப்பதற்காக மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவுட், வெண்ணிலா, மா, தேக்கு போன்ற பல்வேறு வகையான பெருந்தோட்ட பயிர்ச் செய்கை திட்டங்களுக்காக அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி முதலீடுகளை பெற்றுக் கொள்வது சட்டவிரோதமானதாகும்.
அவ்வாறான பல்வேறு முதலீடுளை பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் கண்காணிப்பு பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மத்திய வங்கி குறிபிட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிடும் வட்டி விகிதங்களுக்கு மேலதிகமாக கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் இருந்து வைப்புகளைப் பெறுவது சட்டப்படி குற்றமாகும் என மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கே.ஜி.பி.சிறிகுமார ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரின் இந்த திட்டம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.